சென்ற இதழில் வெளியான "பெருகி வரும் தொழில் நெருக்கடி, வேலையிழப்புக்கு என்ன காரணம்?' கட்டுரையின் தொடர்ச்சி...
தற்போது கோட்சாரத்தில் சனி வக்ரமாகி, வக்ர கிரகமான கேதுவுடன் ஒரே டிகிரியில் பயணிப்பதால், இக்காலகட்டத்தில் ஜாதகம் பார்க்க வருபவர்கள் ஐந்துவிதமான பிரச்சினைகள் தொடர்பாக ஜோதிடரை அணுகுகிறார்கள்.
1. தொழில் நெருக்கடி அல்லது வேலை இழப்பு, தொழில் தொடர்பான வழக்கு.
2. சொத்து தொடர்பான வழக்கு.
3. உறவினர்களிடையே பகை.
4. குலதெய்வம் தெரியாதவர்கள்.
5. பூர்வீகத்தைவிட்டு வெளியேறுதல்.
கடந்த இதழில் தொழில் நெருக்கடி, சொத்து தொடர்பான வழக்கு குறித்து பார்த்தோம். இனி...
3. உறவினர்களிடையே பகை
இந்தியர்களின் சமுதாயக் கட்டமைப்பு குடும்பமாக வாழ்வதே. குடும்ப உறவுகளிடம் மனிதனை இணைப்பது அன்பு எனும் பாசமாகும். அன்பு, நட்பு என்ற உணர்வே மனித வாழ்வை இனிமையாக்குகிறது. குடும்பம், சுற்றம், உற்றார்- உறவினர், வேலை என பல நிலைகளில், பலவித மான உறவுகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்க்கையின் அங்கமாகி இருக்கிறார்கள். மனித வாழ்க்கையில் உறவுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமே ஒருவரின் வாழ்க்கைத்தரத்தை நிர்ணயிக்கிறது.
இன்றைய சமுதாயச் சூழ்நிலையில், உறவினர்களுடன் நல்லிணக்கம் இருந்தால் மட்டுமே சமூக அந்தஸ்து கிடைக்கிறது. சில குடும்ப உறுப்பினர்கள் மிக நெருக்கமாக, ஒற்றுமையாக, அன்பாக இருப்பார்கள். ஒருசில குடும்ப உறுப்பினர்களுக்கு அன்பு என்றால் என்னவென்றே தெரியாது. குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையின்றி, பலவிதமான கருத்து வேறுபாட்டுடன் இருப்பார்கள்.
ஒருவருக்கு அமையும் உறவுகள் நட்புடன் இருப்பதும், பகை, வெறுப்புடன் இருப்பதும் அவரவர் செய்த பூர்வஜென்ம கர்மவினையைப் பொருத்தே அமையும்.
உறவுகளை தாய், தந்தைவழி உறவுகள், திருமணத்தால் ஏற்படும் உறவுகள், நட்பு களால் ஏற்படும் உறவுகள் என பலவிதமாகப் பிரிக் கலாம்.
ஒருசில குடும்பங்கள் ஒற்றுமையுடன் இருப் பதற்கும், சில குடும்பங்களில் பிரிவினை ஏற்படுவதற்கும் என்ன காரணம் என பார்க்கலாம்.
நவகிரகங்கள் குறிக்கும் உறவுகள்
சூரியன்- தந்தை, மூத்த மகன், மாமனார்.
சந்திரன்- தாய், மாமியார், வயதான பெண்கள்.
செவ்வாய்- ஆண் ஜாதகத்தில் சகோதரன், பெண் ஜாதகத்தில் கணவன், ஒரே குலதெய்வத்தைக் கும்பிடும் பங்காளிகள்.
புதன்- நண்பன், காதலன்- காதலி, தாய்மாமன், இளைய மனைவி.
குரு- குழந்தை, முப்பாட்டனார்.
சுக்கிரன்- ஜாதகி, மூத்த சகோதரி, மனைவி, பெரியம்மா, சின்னம்மா, மாமன் மகள், அத்தை மகள், சித்தப்பா மகள், பெரியப்பா மகள், மருமகள், அத்தை.
சனி- மூத்த சகோதரன், சித்தப்பா, சித்தப்பா- பெரியப்பா மகன், சிறிய மாமனார்.
ராகு- தந்தை, தாய்வழித் தாத்தா.
கேது- தந்தை, தாய்வழிப் பாட்டி.
பிரிவினை, வம்பு, வழக்கை ஏற்படுத்தும் கிரகமான கேதுவுடன் சம்பந்தம்பெறும் கிரகங்களால் வம்பு, வழக்கு, பிரிவினை உண்டாகும்.
ஒருவரின் ஜாதகரீதியான இரு நட்பு கிரகங்கள் சேர்க்கை பெற்றால், அந்த கிரகங்கள் குறிக்கும் உறவுகள் சிறப்பாக இருக்கும்.
இரு நட்புகிரகங்கள் மத்தியில் கேது நின்றால், இரு உறவுகளாலும் வம்பு, வழக்கு, பிரிவினை வரும்.
இரண்டு பகை கிரகங்கள் சேர்க்கை பெற்றால், அக்கிரகங்கள் குறிக்கும் உறவுகளிடம் பகை ஏற்படும்.
இரு பகை கிரகங்களுடன் பாவகர்த்தரியில் சிக்கும் உறவுகள் உறவாடி ஜாதகரை துன்பத்தில் ஆழ்த்தும்.
உதாரணமாக, சுக்கிரனுக்கு திரிகோணத் தில் கேது இருந்தால் அல்லது சுக்கிரனும் கேதுவும் நேராகப் பார்த்துக்கொண்டால் மனைவியால், சகோதரியால் கருத்து வேறுபாடு, வம்பு, வழக்கு ஏற்படும்.
அதேபோல், மேலேகூறிய உறவுகளுடன் கேது சம்பந்தம் பெறும்போதும் வம்பு, வழக்கு, பிரிவினை ஏற்படுகிறது.
தற்போதைய கோட்சாரத்தில் தனுசில் சனி, கேது சேர்க்கை ஏற்பட்டிருப்பதால், உறவுகளிடையே சொத்து, காசு, காமம் தொடர்பான வழக்குகள் மிகுதியாகின்றன.
ஜனன காலத்தில் மிதுனம், தனுசில் சுக்கிரன், செவ்வாய் சம்பந்தம் பெறும் இளம் தம்பதியினர் விவாகரத்து வழக்கை அதிகம் சந்திக்கிறார்கள்.
ஜனனகால ஜாதகத்தில் மிதுனத்தில் புதன், சனி நின்று ராகு சாரம் பெற்றவர்கள், தனுசில் புதன், சனி நின்று கேது சாரம் பெற்றவர்கள் தாய்மாமன், சித்தப்பா போன்ற தந்தை, தாய்வழி உறவுகளால் வழக்கை சந்திக்கிறார்கள்.
உறவாடி ஜாதகரை துன்பத்தில் ஆழ்த்து கிறார்கள்.
பரிகாரம்
உறவுகளால் தீராத மனவேதனை, வழக்கை சந்திப்பவர்கள் ஊரின் எல்லை காவல்தெய்வத்தை முறையாக வழிபட வேண்டும்.
4. குலதெய்வம் தெரியாதவர்கள்
குலதெய்வத்திற்கான காரககிரகம் சனி பகவான். காலபுருஷ 9-ஆம் இடமான தனுசில் கேது பகவானுடன் இணைந்திருப்பதால், குலதெய்வம் தொடர்பான பல சந்தேகங்களுடன் மக்கள் ஜோதிடரை அணுகுகிறார்கள். அவை என்ன என்பதைப் பார்க்கலாம்.
குலதெய்வம் என்பது முன்னோர்களால் தலைமுறை தலைமுறையாக வணங்கப் பட்டுவந்த தெய்வமாகும். எல்லா தெய்வங் களிலும் முதன்மையாக வணங்கப்பட வேண்டியது குலதெய்வம். குலம் என்றால் வம்சாவளி என பொருள். குலத்திற் கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும். குலதெய்வ வழிபாட்டை முறையாகச் செய்பவர்களுக்கே நவகிரகங் களும் துணைநிற்கும்.
குலதெய்வ வழிபாட்டின் அவசியம்
அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் எல்லாப் பலன்களும் ஜாதகர், ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாவ- புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கின்றன.
ஜாதகத்திலுள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு, பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான குலதெய்வம் தீர்க்கும்.
குலதெய்வம் தொடர்பாக பல சந்தேகங் களுடன் ஜோதிடரை அணுகுபவர்களில் பலவகை உண்டு. அவற்றில் சில வகை-
1. குலதெய்வமே தெரியாதவர்கள்.
2. குலதெய்வமாக ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வத்தை வணங்குபவர்கள்.
3. கும்பிடும் குலதெய்வம் சரிதானா என்னும் சந்தேகம் உள்ளவர்கள்.
4. கும்பிடும் தெய்வம் குலதெய்வமா? அல்லது குடும்ப தெய்வமா என்ற சந்தேகம் உள்ளவர்கள்.
5. குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வந்தால் பிரச்சினை வருகிறது அல்லது குலதெய்வக் கோவிலுக்கு என்னால் செல்லமுடிவதில்லை.
குலதெய்வ வழிபாட்டில் பலமுறைகள் உள்ளன. அவை:
1. உருவ, உருவமில்லாத வழிபாடுகள்.
2. ஆயுதங்களை வழிபடுவது, நினைவுப் பொருட்களை வைத்து வழிபடுவது.
3. ஆண்கள் மட்டும் கும்பிடும் குலதெய்வம்.
4. இரவில் பூஜை செய்வது.
5. பூஜையின்போது வாய்கட்டி பூஜை செய்வது. வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பூஜை செய்யும் தெய்வம்.
குலதெய்வத்தைக் கண்டறியும் முறை
5- ஆம் இடம் ஆண் ராசியா, பெண் ராசியா எனக் கண்டுபிடித்து, அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா எனத் தெரிந்துகொள்ளலாம். மேலும் அது நில ராசியில் (ரிஷபம், கன்னி, மகரம்) உள்ளதா, நீர் ராசியில் (கடகம், விருச்சிகம், மீனம்) உள்ளதா என்பதைத் தெரிந்துகொண்டு, குலதெய்வம் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கலாம்.
நீர் ராசி என்றால், ஊரின் எல்லையிலுள்ள நீர் சார்ந்த இடங்களுக்கு அருகில் இருக்கும். நில ராசியில் நின்றால், வயல்வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் (மேஷம், சிம்மம், தனுசு) நின்றால், மலைமேல் இருக்கும். குலதெய்வம் பற்றி வீட்டின் மூத்த ஆண் வாரிசின் ஜாதகத்தின்மூலம் அறியலாம். 5-ஆம் இடத்துடன் சந்திரன், சுக்கிரன் சம்பந்தம்பெற்றால் குலதெய்வம் பெண் தெய்வமாகும். சனி சம்பந்தம் பெற்றால், பதினெட்டுப்படி கருப்பண்ணசாமி, மதுரைவீரன், முனீஸ் வரன் போன்ற ஆண் காவல்தெய்வங் களைக் குறிப்பிடுகிறது. செவ்வாய் சம்பந்தம்- பெண்கள் அருகில் சென்று வழிபட முடியாத உக்கிர ஆண் தெய்வமாகும். குரு சம்பந்தம் பெற்றால், குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த பெரியவர்களை வழிபடுதல். ராகு- கேதுக்கள் சம்பந்தம் பெற்றால் உக்கிரமான வனதேவதைகளாக இருக்கும்.
ஜாதகரீதியாக குறிப்பாகக் கண்டறிய முடியாத நிலையில் சோழிப் பிரசன்னம், அஷ்டமங்கலப் பிரசன்னத்தால் தீர்வு கிடைக்கச் செய்யமுடியும்.
5-ஆம் அதிபதி நீசம், அஸ்தங்கம் அடைய, குலதெய்வம் இருந்தும் வழிபாடு செய்யும் ஆர்வமிருக்காது. 5- ஆம் அதிபதி 8- ல் மறைய குலதெய்வக் குற்றம், கோபம் இருக்கும். குலதெய்வக் குற்றம், கோபம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. மிகக் குறிப்பாக குலதெய்வ வேண்டுதலை நிறைவேற்றாமல் இருப்பது, குலதெய்வக் கோவிலுக்குச் செல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் குலதெய்வக் குற்றம், குலதெய்வக் கோபம் ஏற்படுகிறது. குலதெய்வக் கோபத்தை சரிசெய்ய கோவிலை சரியாகப் பராமரித்து, முறையான அபிஷேக ஆராதனை செய்து, வாசனைமிகுந்த மலர்களால் அலங்கரித்து உணவு படைக்க, குலதெய்வக் குற்றம், கோபம் சரியாகும். அத்துடன் கோவிலுக்கு வருடம் ஒருமுறையாவது சென்றுவழிபாடுசெய்து, தானதர்மம் செய்ய வேண்டும். மேலும், குலதெய்வத்தின் திருமேனி பழுதடையாமல் காக்க வேண்டும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்
செல்: 98652 20406